Thursday 28 February 2013

காவிரி - ஆறும் நீர்த் தகராறும்

                        
                                   காவிரி
                          ஆறும் நீர்த் தகராறும்

  
   ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி அடுத்த நூற்றாண்டில் நுழைந்து கி.பி.2013 ஆம் ஆண்டாகிய சமகாலம் வரையில் தொடர்ந்து நிலவும் காவிரி ஆற்றுநீர்த் தகராறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி!
                                                     (முதலாம் பகுதி)
காவேரி ஆறு,  காவிரி ஆறு - எது சரி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         தமிழ் நாட்டின் புண்ணிய ஆறாகக் கருதப்படும்  ஆறு ‘காவிரி ஆறு’ ஆகும்.

   
    
இந்த ஆறு,காவேரி ஆறு’ என்றும்காவிரி ஆறு’ என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. ஒரே ஆற்றினைக் குறிக்கும் இவ்விரு பெயர்களுள் எது சரியானது என்பதை முதலில் ஆராய்ந்து அறிவது இன்றிமையாதது ஆகின்றது.

     
இந்த
ஆற்றின் இரு பெயர்கள் குறித்து தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டு விடை கண்டறிந்துள்ளார். அது :-

     
குலோத்துங்க சோழன் உலா, மணிமேகலை, திருவாஞ்சிய புராணம், அண்ணாமலையார் சதகம், போன்ற பண்டைய தமிழ் நூல்களில்காவிரி’ என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

           
ஔவையார், தொண்டரடிப் பொடியாழ்வார் முதலியயோரும்காவிரி’ என்ற சொல்லைத்தான் கையாள்கின்றனர்.

           கலைக்களஞ்சியத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு
சொற்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
காவிரி
~~~~~~~~
             காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து பெருகிய ஆறு என்பதால் ‘காகவிரி’ என்று வழங்கிய பெயரே பின்னர்காவிரி’ என்று மருவியது என்றும், இந்திரனது நந்தவனம் (கா) செழிக்க விரிந்தமையால்காவிரி’ என்று பெயர் பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

காவேரி
~~~~~~~~~
       மேலும், கவேரன் மகளாக வாழ்ந்தமையால்காவேரி’ என்று அழைக்கப்பட்டாள். இவள் அகத்தியருக்கு மணம் முடிக்கப்பட்டாள்.
அகத்தியர் இவளது தெய்வத்தன்மையை உணர்ந்து கமண்டலத்தில் நீராக மாற்றினார் என்றும், அகத்தியரின் கமண்டலம் சூறைக் காற்றால் கவிழ்ந்து கமண்டல நீரான காவேரி ஓடியது என்றும், அதுவே,காவேரி’ ஆறாக மாறியது என்றும் கலைக்களஞ்சியம் கூறுகிறது.
            ஆயினும்,காவிரி’காவேரி’ என்ற இரண்டு பெயர்களில் எது சரி என்பது பற்றிய விளக்கம் மேற்கண்ட பண்டைய தமிழ் நூல்களிலோ கலைக்களஞ்சியத்திலோ இல்லை.
      இக்கேள்விக்கான விடையை இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் கூறுகின்றது.
             சிலப்பதிகாரத்தில் மட்டுமே  காவிரி’காவேரி’என்ற இரண்டு சொற்களும் இடம் பெற்றுள்ளன.

‘காவிரி’ ‘காவேரி
~~~~~~~~~~~~~~~~~~~
       இந்த ஆற்றினைக் குறித்து சிலப்பதிகாரத்தின் இயற்றமிழ்ப் பகுதியில்
         “காவிரி வாயில் கடைமுகம் கழிந்து’’
         “குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி”
         “காவிரிப் புதுநீர்க் கடுவரல்………’’
         “கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று’’
என்றும்,

         சிலப்பதிகாரத்தின் இசைத்தமிழ்ப் பகுதியில் கானல் வரியில் 

…புலவாய் வாழி காவேரி!
…அறிந்தேன் வாழி காவேரி !
….நடந்தாய் வாழி காவேரி !
…..வளனே வாழி காவேரி! ’
என்றும், கூறப்பட்டுள்ளது.
[   தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள் ‘இயற்றமிழ்’ என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது. பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும்.
   ‘இசைத்தமிழ்’ என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை
நோக்கமாகக் கொண்டு நடப்பது; பண்ணோடும் பண்ணுடன் சேர்ந்த தாளத்தோடும் இசைத்தற்காகவே பாடிப்பாடி உருவாக்கப் பெற்ற பாடல்கள்  இசைத்தமிழ் என்று சொல்லப்படும்.  ]

    
காவேரி’ என்ற சொல்லை இளங்கோ அடிகள் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை வேங்கடசாமி அவர்கள், "வரிப்பாட்டுகளின் கடைசி சொற்கள் மூவைச் சீராக முடிகின்றன. அதனால்காவிரி’ என்னும் ஈரசை சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ்விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை அமைத்தால் ஈரசைச் சீராக்கித் தலை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றியமைத்தார்" என்று காரணம் காட்டி விளக்குகிறார்.

   
   இந்த
ஆறு இளங்கோ அடிகளால் இவ்வாறு இரண்டு வகையாக சுட்டிக்காட்டப்பட்டாலும்காவிரி’ என்பதுதான் சரியான சொல் வழக்கு. ‘காவேரி’ என்பது பேச்சு வழக்கு என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

 
     எனவே,
காவிரி’ என்ற சொல் இலக்கிய வழக்கு என்பதையும்காவேரி’ என்ற சொல் பேச்சு வழக்கு என்பதையும், தமிழறிஞர். வேங்கடசாமி அவர்களின் ஆய்வின் மூலம் நாம் அறியமுடிகின்றது.

             
                                    (தொடரும்)

4 comments:

  1. அருமை! அருமையான விளக்கத்துடன் சொன்னதற்கு நன்றிகள் பல..

    நானும் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.செம்மலை ஆகாஷ் .

      Delete
  2. அருமையான பயனுள்ள பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திருமதி.தமிழ்ச்செல்வி, தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களைக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

      Delete