3.பிராமணர்களுக்கு ‘ அந்தணர் ’ என்னும் பெயர் வந்தது எப்படி?
பிராமணர்களுக்குத் தமிழ்நாட்டில், பொதுவில், பார்ப்பார்; ஐயர்; அந்தணர் என மூன்று பெயர்கள் வழங்கி வருகின்றன. வழக்கில் இவற்றை ஒரே வகுப்பினரைக் குறிக்கும் மூன்று பெயர்களாய்க்கொள்வது பிழையாகும். இம்மூவற்றையும் நன்கு ஆராய்ந்த அறிஞர் கூற்றை உற்றுநோக்கின் உண்மையான பொருள் விலங்கும்.
அந்தணர்
‘ஐயன்’
என்னும் பெயர் பார்ப்பனருக்கு
எவ்வாறு அமைந்ததோ அவ்வாறே ‘அந்தணன்’
என்னும் பெயரும் அமைந்ததாகும். ஆனால்,
இப்பெயர் இன்னும் நூல் வழக்காகவே
யுள்ளது.
‘அந்தணன்’ என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு(வேதாந்தம்)களைப் பொருந்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழிவழியர்.
‘அந்தணன்’ என்பதை அம்+தண்மை+அன் என்று பிரித்து ‘அழகிய குளிர்ந்த அருளையுடையவர்’ - ‘முனிவர்’ என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர்.
அந்தணர் என்னுஞ் சொல்லின் ‘அழகிய குளிர்ந்த அருளையுடையவர்’ என்னும் பொருளுக்கேற்ப,
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்” |
(குறள். 30)
|
என்று அந்தணர்க்கு இலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவிகளைப்பற்றிக் கூறும் “நீத்தார் பெருமை” என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர்.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப” |
(செய். 1711)
|
என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே,
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” |
(குறள். 28)
|
என்று 'நீத்தார் பெருமை'யிற் குறித்தனர் திருவள்ளுவர்.
அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும். அதனால் தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல்லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர்.
பிராமணருக்கு அருளில்லையென்பது, மனுதரும நூலாலும், அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப்படும்.
உணவுக்கு வழியற்றவரையும், ஒழுக்கங் குன்றியவரையுங்கூடக் கூசாமல் முனிவரென்று கூறுவது ஆரிய வழக்கம்.
“அஜீகர்ததரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச் சேபன் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ் செய்தபடியால், அதனால் அவருக்குப் பாவம் நேரிடவில்லை” என்று மனுதரும நூல் (10:105) கூறுகின்றது.
பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலை பிரமசரிய மென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற்பகுதியான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படுவதனாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப்பின், எந்த நிலையிலும் தம்மைத் துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு.
தமிழ முனிவரான ‘அந்தணர்’ சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றலுள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட்பாலில், 'பெரியாரைத் துணைக்கோடல்', 'பெரியாரைப் பிழையாமை' என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக் கூடும். இதையே “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” என்னும் நூற்பா குறிப்பதாகும்.1 'வரைவின்றே' என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லா முண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால், அதே சமையத்தில், அது அவர்க்கு
_________________________________________________________________________
1. இந்நூற்பாவிற்கு, “அரசர் இல்வழி அந்தணரே அவ் வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது என்றவாறு” என்று பேராசிரியர் உரை கூறியதுங் காண்க.
விலக்கப்பட வில்லை என்றும் அறியலாம்.
தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றியமையால் அந்தணரோடு சேர்த்தெண்ணப்பட்டார். இதை,
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய” |
(தொல். 160)
|
என்பதால் அறியலாம்.1
இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கேயுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார்.
“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை” |
(குறள். 245)
|
ஆரியருள், முனிவர் போன்றவர் அந்தணர் என்றும், பிறரெல்லாம் பார்ப்பாரென்றுங் கூறப்பட்டனர். ஆரிய முனிவரை, வீரமாமுனிவர் (Beschi), தத்துவபோதக சுவாமி (Robert de Nobili) என்னும் மேனாட்டாருடன் ஒப்பிடுக.
தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்படவில்லை என்பதையறியலாம்.
முனிவரைக் கடவுள்1ரென்றும், பகவரெ2ன்றும், கடவு ளோடொப்பக்3 கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம்.
தங்களை அந்தணராகக் காட்டிக்கொண்ட பார்ப்பனர் பின்னர், தமிழர் தங்களைச் ‘சாமி’ என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்துவிட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது.
-ஆராய்ந்தறிந்து கூறியவர் :
மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்.
No comments:
Post a Comment