2. பிராமணர்களுக்கு ‘ ஐயர் ’ என்னும் பெயர்
வந்தது எப்படி?
பிராமணர்களுக்குத்
தமிழ்நாட்டில், பொதுவில், பார்ப்பார்;
ஐயர்; அந்தணர் என மூன்று
பெயர்கள் வழங்கி வருகின்றன. வழக்கில்
இவற்றை ஒரே வகுப்பினரைக் குறிக்கும்
மூன்று பெயர்களாய்க்கொள்வது பிழையாகும். இம்மூவற்றையும் நன்கு ஆராய்ந்த அறிஞர் கூற்றை உற்றுநோக்கின் உண்மையான
பொருள் விலங்கும்.
ஐயர்
'ஐயர்' என்பது ‘ஐயன்’ என்னும் பெயரின் பன்மை. 'ஐயன்' என்னும் பெயருக்கு 'ஐ' என்பது பகுதி.
‘ஐ’ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல்.
இன்னமும், ‘வியக்கத்தக்க’ பொருள்களைக் கண்டவிடத்து, ‘ஐ' என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறுவர்களுக்கு இயல்பு.
“ஐவியப்பாகும்” |
(தொல். உரி. 89)
|
என்பது தொல்காப்பியம்.
வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவேயிருக்கும்.
ஐ + அன் = ஐயன். ‘ஐயன்’ என்பான் வியக்கப்படத் தக்க பெரியோன்.
ஒருவனுக்குப் பெரியோராயிருப்பவரை, எடுத்துக்காட்டாக, அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, அண்ணன், மூத்தோன் எனும் இத்தனைபேரையும் ‘ஐயன்’ என்னும் பெயர் குறிப்பதாகும்.
தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில்,. ‘Sir’ என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ‘ஐயன்’ என்பதை ஒப்பிடலாம்.
'ஐயன்' என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாக நூல்வழக்கில் பெரியோன் என்னுங்கருத்தில் அரசனையும், முனிவனையும், பின்பு அறிவுபுகட்டும் ஆசிரியனையும்; உலகவழக்கில், தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப் பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்போரையுங் குறிப்பதாகும்.
அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் -பெரியோர். ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொதுவாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொருளையே அடிப்படையாகக் கொண்ட தாகும்.
பார்ப்பனருக்கு ‘ஐயர்’ என்னும் பெயர் 'முனிவர்' என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த ‘காசியபன்’ போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒத்திருந்தமையால் ‘ஐயர்’ எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்ற வர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது.
ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு.
‘நாட்டாண்மை’யும் ‘ஊராண்மை’யும்பற்றி ஏற்பட்ட ‘நாடன்’
( நாடான், நாடார் ), ‘அம்பலகாரன்’, குடும்பன்’ என்னும் தலைவர் பெயர்கள் நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகி விட்டன.
வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஓர்அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, ‘மந்திரி’ என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது.
இங்ஙனமே ‘ஐயர்’ என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும்.
‘ஐயன்’ என்னும் தனித்தமிழ் பெயரை ‘ஆரியன்’ என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ‘ஆரியன்’ என்னும் பெயருக்கு வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ்நாட்டிற் பிற்காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதினாலும், ‘ஆரியன்’ என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர்போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று.
'ஆரியற் காக வேகி' என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக “யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று ( குறுந்.7 ) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ‘ஆரியன்’ என்னும் பெயரை வழங்கியிருப்பது வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக்கேயன்றி, ‘ஐயன்’ என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலக வழக்கன்று.
-ஆராய்ந்தறிந்து கூறியவர் :
மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்.
No comments:
Post a Comment